Category Archives: gardening

திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management)

Article by: Ms Rathai Muthu

திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள்,வணிகவளாகங்கள், தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் தேவை இல்லாத பயன்படுத்தப்பட்ட திடப்பொருள்களை சரியான முறையில் மறுபடியும் உபயோகிப்பதற்கான வழிவகைகளைச் செய்வதாகும் .

திடக்கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. உதாரணமாக காகிதம், ரப்பர்,பிளாஸ்டிக் பொருள்கள் , கண்ணாடிகள் , தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகள் போன்றவை ஆகும்.

திடக்கழிவுகள் அதிக அளவில் வீடுகள், அலுவலகங்கள் , மருத்துவமனைகள் , கல்வி நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் , வேளாண் கழிவுகள் , நகராட்சி கழிவுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெறுகிறது.

திடக்கழிவுகளின் வகைகள்

சிதைவடைவன

இவை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைவடையும்.(எ.கா) இறந்த தாவரங்கள் , விலங்குகளின் உடல்கள் மற்றும் காய்கறி கழிவுகள்

சிதைவடையாதவை

இவை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைவடையாது.(எ.கா) பிளாஸ்டிக் , டயர்கள், கண்ணாடி மற்றும் உலோகங்கள்

சாம்பல்

மரக்கட்டை, நிலக்கரி போன்றவை எரிபொருளாக பயன்படுத்தும் போது கிடைக்கும் சாம்பல் ஆகும்.

கட்டுமான திடக்கழிவுகள்

கட்டிடங்கள் கட்டும் போதும் , இடிக்கும் போதும் வெளிப்படும் கழிவுகள் ஆகும்.(எ.கா) கற்கள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் .

நச்சுத் திடக்கழிவுகள்

இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் .(எ.கா) உலோகங்கள் (குரோமியம் , பாதரசம், காட்மியம் ) மற்றும் பூச்சிக்கொல்லிகள் , வெடிபொருள்கள், மருத்துவமனை கழிவுகள் மற்றும் கதிரியக்கத் தனிமக் கழிவுகள்

வேளாண் கழிவுகள்

வேளாண் பொருள்களை பயன்படுத்தியது போக மீதம் உள்ளவை இந்த கழிவுகள் .(எ.கா) நெல் உமி, தவிடு, கரும்புச்சக்கை, கரும்புத்தோகை, சோளத்தட்டை, பண்ணைக்கழிவுகள், தென்னைக் கழிவுகள்

ஆனால் இவற்றால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை .

கழிவுநீர் சுத்திகரிப்பு கழிவுகள்

கழிவுநீர் சுத்திகரிக்கும் போது வெளிவரும் திடக்கழிவுகளாகும்.

திடக்கழிவுகளின் விளைவுகள்

  • இக்கழிவுகளை எரிக்கும் போது காற்று மண்டலத்தையும் , மண்ணில் இடும் போது நிலத்தையும் மற்றும் நீரினையும் மாசுபடுத்துகிறது.
  • மருத்துவமனைக் கழிவுகள் பல நோய்கள் ஏற்படக் காரணமாகிறது .
  • காகிதக் கழிவுகள் மற்றும் உலோகங்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யும் போது சுவாசக் கோளாறுகள், கண் எரிச்சல் மற்றும் இரைப்பை தொற்று நோய் ஏற்படுகிறது .
  • குளோரின் உள்ள திடக்கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் டையாக்ஸின் , ப்யூரான் வாயுக்களை சுவாசிக்கும் போது மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
  • நச்சுக் கழிவுகள் உணவுச் சங்கிலி மூலம் உடலில் சேமிக்கப்பட்டு புற்றுநோய் உண்டாக்குகிறது .

திடக்கழிவினை மேலாண்மை செய்தல்

https://www.tnrd.gov.in/sanitation_corner/training_materials.htm

சேகரித்தல்

திடக்கழிவுகளை சேகரித்து அவற்றை சுத்திகரிக்கும் இடத்திற்கு எடுத்துவருதல்.

பிரித்தல்

திடக்கழிவுகளை அவற்றின் தரம் வாரியாகப் பிரித்தல்.(எ.கா) சிதைவன, சிதைவடையாதவை, எரியும் பொருள்கள் , எரியாதப் பொருள்கள் எனப் பிரித்து மறுசுழற்சி செய்தல்.

தூளாக்குதல்

திடக்கழிவுகளை அரைத்து தூளாக்கி சுத்திகரிப்பு செய்து பின்பு பயன்படுத்துதல்.

திடக்கழிவு சுத்திகரிக்கும் முறைகள்

  • உயிரியல் முறை
  • வெப்ப முறை

உயிரியல் முறை

இம்முறையில் நுண்ணுயிரிகள் முலம் திடக்கழிவுகள் சிதைக்கப்படுகின்றன. திடக்கழிவுகளை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் சிதைக்கப்பட்டு உரமாகவோ அல்லது நிலத்திலோ புதைக்கப்படுகிறது.

வெப்பமுறை

இம்முறையில் திடக்கழிவுகளை வெப்பபடுத்தி எரிபொருளாகவோ அல்லது எரித்து சக்தியாகவோ மாற்றப்படுகிறது .

திட்டக்கழிவு மேலாண்மையின் பயன்கள்

  • மக்களை நோயிலிருந்து பாதுகாத்தல் . மற்ற பிற உயிர்களுக்கும் திடக்கழிவுகளால் தீங்கின்றி பாதுகாத்தல்.
  • மறுசுழற்சி செய்வதன் மூலம் மீண்டும் அப்பொருள்களின் உபயோகத்தை அதிகமாக்கல்.
  • மேலும் இதன் முக்கியப் பணி சுற்றுச்சூழலை நம் தலைமுறை தலைமுறைக்கும் பாதுகாத்தலே ஆகும்.